Tuesday, 22 May 2012

அருள் செய் தாயே

அருள் செய் தாயே! அம்மா என் மீது அன்பு செய் தாயே!
அருள் செய் தாயே! அம்மா என் மீது அன்பு செய் தாயே!

உன் பொன்எ ழில் பாதத்தை என் சிரம் வைத்து நீ

அருள் செய் தாயே! அம்மா என் மீது அன்பு செய் தாயே!


ஆயிரம் இதழ் மலரில் அகண்ட ஒளி வீசுவாய்
அகிலமெல்லாம் துன்ப இருளினை நீக்குவாய்
கடைக்கண் அருள் அளித்தென் கவலையை போக்குவாய்
காலமெல்லாம் எனை உன் காலடியில் இருத்துவாய்

அலையும் ஐம்புலன்களை அடக்கி ஒடுக்கிட அருள் எனக்களித்து மகிழ்ச்சி செய்
நின் நினைவு எனை விட்டு நீங்காதிருந்திட என் மனத்தினில் நீ எழுச்சி செய்
கனவிலும் நனவிலும் நீயே உடனிருந் தெனை நல் வழியினில் நடக்கச் செய்

கல்மனம் கரைந்திட நான் அழைக்கிறேன் அம்மா அம்மா
கடுகி வந்து நீ காட்சி கொடுப்பாய் அம்மா அம்மா
கரங்களால் எனக்காசிகள் தருவாய் அம்மா அம்மா
கண்களின் ஞான ஒளியினில் நனைப்பாய் அம்மா அம்மா
வாய் மொழியாலே வாழ்த்துகள் தருவாய் அம்மா அம்மா
வாழ்த்தி வணங்கிட நல்லருள் தருவாய் அம்மா அம்மா


கல்மனம் கரைந்திட நான் அழைக்கிறேன்
கடுகி வந்து நீ காட்சி கொடுப்பாய் .
கனிவு செய்தாய், கனமும் செய்தாய் ,கருணையும் செய்தாய் ,
என் தாய் நீ உனையன்றி யாருளர் என்மீது அன்பு செய்து ஆதரவளித்திடவே

அருள் செய் தாயே! அம்மா என் மீது அன்பு செய் தாயே!

எல்லாம் நீயே

இன்னிசையின் இனிமை நீ ! இதமான
இசையின் நாதம் நீ ! பண்ணும் நீயே!
மலர்களில் மணமும் நீ ! மனத்தை கவர்கின்ற
பலப் பல வண்ணமும் நீ ! வடிவமும் நீயே!
ஆழ்கடலின் அமைதி நீ ! ஆதார
ஒலியான பிரணவம் நீ ! சுருதியும் நீயே!
எல்லை இல்லா அருள் புரிந்தெமைக் காக்கும்
எந்தன் தாய் நீயே ! எல்லாம் நீயே !


சுடர் விளக்கின் ஒளி கொண்ட விழியாலே
எந்தன் தாய் என்னை நீ கனிவாய் பாராய்!
சிந்தையைத் தெளிய வைத்து சீரிய எண்ணம்;
சிறப்பான செயல் வண்ணம் அனைத்தும் தாராய்!
வானத்து மழை போலே வந்து நின்று
வேதனைகள் துடைத்து வெற்றி அளிப்பாய் !
வளமனைத்தும் பெற்ற வாழ்வை வழங்கும்
வள்ளல் நீ உன்னை என்றும் மறவேன்.


அம்மையும் நீ ! அப்பனும் நீ ! ஆதியான அண்டம் நீ !
அகிலம் நீ ! அனைத்தும் நீயே!
ஆதார சீவனும் நீ! ஆருயிரும் நீ!
ஆறாதாரம் ஆன சக்கரமும் நீ!
நிலமும் நீ! நீரும் நீ! நெருப்பும் நீ!
காற்றும் நீ ! நெடிய வானமும் நீயே!
அணுவினுள் அணுவாய் இருக்கும் தாயே!
அனைவரையும் நீ காத்திடுவாயே !


மெய்யான உடலொரு நாள் பொய்யாகும் ,மேதினியில்
மேலான உறவும் மறக்கும்
தொய்யாத கருமங்கள் தொடர்ந்து வரும் , செல்வம்
தூர நின்று கை காட்டி விடையும் கொடுக்கும்,
எய்யாத பிறவி எல்லாம் எதிர் நோக்கும் , என்னுயிரை
எத்தனையோ ஐயம் சூழும்
பொய்யாத நின் கருணைப் புது வெள்ளமா ட்கொள்ள
பூக்குமம்மா ஆனந்தம் என் மனத்துள்ளே.


வளர்கின்ற பருவத்தில் வார்த்தெடுத்த முத்தளித்து
வந்த வடு இன்றுமுண்டு.
தளர்கின்ற வயதினிலும் தள்ளாடும் நிலையினிலும்
தாங்கி நீயே பிடிப்பது உண்டு
கிளர்கின்ற போததனால் கேடொன்றும் சூழாது
காப்பதற்கு கருணை உண்டு
மலர்கின்ற பக்திக்கு அருள்கின்ற தாயே என்
மனத்தில் நீ என்றும் உண்டு.


காட்சிக்கு எளிதான கருத்துக்கு நிறைவான
காவியமே மகமாயி நீ.
ஆட்சிக்கு நீதானே அருள்வதுந்தன் விழிதானே
ஆதி அந்தம் அபிராமி நீ
சாட்சிக்கு சத்தியமே சாந்தியின் தரிசனமே
சாச்வதமே கருமாரி நீ
மாட்சிக்கு இலக்கணமே மீட்சிக்கு வழித்தடமே
தாட்சாயணி திரி சூலி நீ.


தணல் பட்ட புழுவாகத் தவித்திருந்த அடியேனைத்
தடுத்து ஆட்கொண்ட தாயே,
மனம் பட்ட பாட்டுக்கு மாற்றாகி சுகமானாய்
மஹா காளி கருணை நீயே,
தினம் கெட்டுத் திரிந்தவனின் நடை திருத்திச்
சீராகி திசை காட்டி நின்றாய் நீயே
கனல் பற்றக் கற்பூரம் கரையும் நிலை போலுன்
கருணை பற்றக் கரைந்தேன் நானே.


கவி பாடும் திறந்தந்தாய் கனிவான குரல் தந்தாய்
கருத் தரிக்கும் மனமும் தந்தாய்
அவை ஈர்க்கும் வரம் தந்தாய் அணியாக உறுத் தந்தாய்
அளவில்லாத பொருளும் ஈந்தாய்
குவிகின்ற கரத்தோடு கும்பிடும்போதென் முன்னே
கோதை நீ எழுந்து வந்தாய்
புவிமிசை சமயபுரம் தனி மலர் மாரித்
தாய் பொற்பதமே போற்றி போற்றி.


நாதாந்த மேலிருக்கும் ஞானச் செல்வி நாகமென
விளங்குகின்ற ஆதீ சக்தி,
வேதாந்த முடிச்சவிழ்க்க சுழி முனை தன்னில்
வேள்வி செய்து காத்திருக்கும் எளிஏனுக்குச்
சாதனையால் திட்டி தன் தாள் திறந்தங்கே
தக தகக்கும் நெருப்பாற்றைக் கடந்து செல்ல
வீதியாய் பாலம் அமைத்துத் தாராய்
விண் மண்ணை இணைக்க வல்ல கருணை மாரி.






Monday, 21 May 2012

மஹா சக்தி விண்ணப்பம்

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லால் என்றன்
மூச்சை நிறுத்திவிடு.
தேகத்தைச் சாய்த்து விடு - அல்லால் அதில்
சிந்தனை மாய்த்துவிடு.
யோகத்திருத்தி விடு - அல்லால் என்றன்
உனைகச் சிதைத்து விடு.
ஏகத் திருந்துலகம் - இங்குள்ளன
யாவையும் காப்பவளே!

பந்தத்தை நீக்கி விடு - அல்லால் உயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு.
சிந்தை தெளிவாக்கு - அல்லால் இதைச்
செத்த உடலாக்கு.
இந்தப் பதர்களையே - நெல்லாமென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று
இயங்கி இருப்பவளே.

உள்ளம் குளிராதோ? - பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம்உருகாதோ? அம்மா பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற கரியவளே - அனைத்திலும்
மேவி இருப்பவளே.

திரு வேட்கை

மலரின் மேவு திருவே - நின்மேல் மையல் பொங்கி நின்றேன் ;
நிலவு செய்யும் முகமும் - காண்பார் நினைவழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும் - தெய்வக் களி துலங்கு நகையும்
இலகு செல்வ வடிவும் - கண்டுன் இன்பம் வேண்டுகின்றேன்.

கமல மேவும் திருவே - நின் மேல் காதலாகி நின்றேன்;
குமரி நின்னை இங்கே பெற்றோர் கோடி இன்பம் உற்றார் ;
அமரர் போல வாழ்வேன் - என் மேல் அன்பு கொள் வையாயின்
இமய வெற்பின் மோத- நின் மேல் இசைகள் பாடி வாழ்வேன்.

வாணி தன்னை என்றும் - நினது வரிசை பாட வைப்பேன் ,
நாணி ஏகலாமோ ? - எனை நீ நன்கறிந்திலாயோ? .
பேணி வை யமெல்லாம் - நன்மை பெருக வைக்கும் விரதம்
பூணு மைந்தரெல்லாம் - கண்ணன் பொறிகள் ஆவரன்றோ ?

பொன்னு நல்ல மணியும் சுடர் செய் பூண்களேந்தி வந்தாய்
மின்னு நின்றன் வடிவில் - பணிகள் மேவி நிற்கும் அழகை
என்னு ரைப்பனேடி- திருவே! என்னுயிர்க்கொர் அமுதே!
நின்னை மார்பு சேரத் தழுவி நிகரிலாது வாழ்வேன்.

செல்வம் எட்டும் எய்தி - நின்னால் செம்மைஏறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை வாழ்வில் இல்லையாக  வைப்பேன்;
முல்லை போன்ற முறுவல் காட்டி மோக வாதை நீக்கி
எல்லை யற்ற சுவையே - எனை நீ என்றும் வாழ வைப்பாய்.


ஓம் சக்தி

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர்மணிப் பூண்
பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ
வஞ்சனையின்றி பகையின்றிச் சூதின்றி வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .

"நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள்;
அல்லது நீங்கும்" என்றே உலகேழும் அறைந்திடுவாய் முரசே .
சொல்லத் தகுந்த பொருளில்லை காண் இங்கு சொல்லுமவர் தனையே
அல்லல் கெடுத்தமரர்க் கிணையாக்கிடும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .

நம்புவதே வழி என்ற மறை தனை நாமின்று நம்பிவிட்டோம்
கும்பிட் டென்நேரமும் சக்தி என்றாலுனைக் கும்பிடுவேன் மனமே
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சம் இல்லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம்ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .

பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு போற்றி உனக்கிசைத்தோம்
அன்னை பராசக்தி என்றுரைத்தோம் தளை அத்தனையும் களைந்தோம்
சொன்னபடிக்கு நடந்திடுவாய் மனமே தொழில் வேறில்லை காண்
இன்னுமதே உரைப்போம் சக்தி ஓம் சக்திஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொருளாக விளங்கிடுவாய்
தெள்ளு கலைத் தமிழ் வாணி நினக்கொரு விண்ணப்பம் செய்திடுவேன்
எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராது என்றன் நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல் சக்தி வேல்.

Wednesday, 16 May 2012

காளி வாழ்த்து

அன்பு பொங்கிடும்  ஆரணி வாழிய
ஆசி  நல்கிடும் நாரணி  வாழிய
இன்பம் தந்திடும் இந்த்ராணி வாழிய  என்றே பணிந்தேனே .

ஈசனுடன் இணை ஈஸ்வரி வாழிய
உலகை ஆளும் உமையே நீ வாழிய
ஊழ்வினை நீக்கும் ஊர்வசி வாழிய  என்றே பணிந்தேனே .

எங்கும் நிறைந்திடும் எழிலி நீ வாழிய
ஏற்றம் கொடுக்கும் ஏகாம்பரி வாழிய
ஐம்பூதம் தன்னுள் அடக்கியவள் வாழி என்றே பணிந்தேனே.

ஒண்பொருள் தரும் ஒய்யாரி வாழிய
ஓதாது உணர்த்திடும் ஓங்காரி வாழிய
அவ்வியம் தீர்க்கும் அன்னை நீ வாழிய  என்றே பணிந்தேனே.

பாதி உடலீந்த பரமருடன் வந்து
பாவமே புரி அடியேனுக்கருள் செய்து
மேவும் வினையினை பஞ்சாய் பறக்கச் செய்ய வருவாயே .

கரங்களில் கொல்லும் ஆயுதம் தாங்கியே
சிரம் ஒன்றும் பொற்கரந்தனில் ஏந்தியே
வரங்களை வகை இன்றி வழங்கிட வருவாயே .

கண்களில் மின்னும் உன்னுருவம் காட்டி
தண்ணெனும் மலர்ப் பாதம் தலை சேர்த்தி
மண்ணில் நல்வண்ணம் வாழ வழிவகை  செய் தாயே

நாணல் போல் வளைந்தாடும் இடை உடை
பாணம் ஐந்தும் கைக்கொன்டு  நின்றனை
வானவர் போற்றும் வாழ்வை வழங்கினை காளி நீயே .









பாடகச்சேரி சித்தர் போற்றி


ஆடகப் பொற்சபை ஆண்டவர் அருள் பெற்ற
பாடகச்சேரி வளர் பரமகுரு போற்றி !
ஏடகத் தெழுதவும் ஒண்ணுமோ நினது புகழ்
பாடுவோம் இராமலிங்க சுவாமியே போற்றி.

நாடி வருவோர்க்கெல்லாம் நலம் பல நல்கும் எம்
தேடரிய மாணிக்கத் திருவுரு போற்றி
கூடுவோர் குறிப்பறி கொற்றவ போற்றி
நாடெலாம் போற்றிடும் நற்றவ போற்றி

கொங்கு நன்னாடு வந்த குருமணி போற்றி
பங்கமில் கன்னட பைந்தவ போற்றி
பொங்கு புனல் பொன்னி நாட்டிடைத் திருப்பணி
தங்கிச் செய்த தத்துவ போற்றி

சித்தர் எரிசாமி பத்தரே போற்றி
பக்தர்கட் கருள் செய்த சித்தரே போற்றி
அன்னதான தாதா எம் அரசே போற்றி
கன்னல் கறி அற்புதம் நிகழ்த்தினை போற்றி

அருமருந்து அளித்து பிணி தவிர்த்தவ போற்றி
அருமை மிகு உயிர் கொடுத்த வள்ளலே போற்றி
விடம் தவிர்த்த வித்தக வேந்தரே போற்றி
மடம் மரு நெஞ்சுக்கும் இறங்கினை போற்றி

அறச்சாலை நிறுவி அறம் வளர்த்தனை போற்றி
துறவியர் போற்றிடும் தூமணி போற்றி
உண்டியல் காணிக்கை ஏற்றனை போற்றி
கொண்ட பொருள் குடந்தைக்கு ஆக்கினை போற்றி

கிளர்ந்தெழுந்து கீழக் கோட்டம் கண்டாய் போற்றி
வளந்தரு திருப்பணி புரிந்தனை போற்றி
ஆகத்தை நாகப்பர்க்கு ஆலயம் ஆக்கி
போகத்தை செய் தவமாமுனி போற்றி

காஞ்சி மாமுனி புகழ் வளர்த்தனை போற்றி
வாஞ்சைமிகு வைரவர் திருத் தொண்டரே போற்றி
தண்டபாணியைத் தொழுது அமைத்தாய் போற்றி
தண்டம் கைக்கொண்டு எங்கும் உலவினை போற்றி

" மெய்போலும்மே " எனும் மந்திரத்தினை
ஐய நின் எழுத்தினில் பொறித்தனை போற்றி
புன்னைநல்லூர் கிண்டி பங்களூர் உகந்து
நன்னெறி துலக்கி நவின்றவ போற்றி

படம் பக்க நாதர் திருவொற்றியூர் வதிந்து
நடம் நவில் திருச்சபை சமைத்தாய் போற்றி
புடமிட்டு அமைந்த பொன்மேனி தன்னை
திடம்பெற நிறைநிலைக் காக்கினை ஐயா.

வாரணன் குமரன் வடிவுடை நாயகி
காரணன் கழல்பணி கண்மணி போற்றி
சீரணி இராமலிங்க சுவாமிகள் போற்றி
பூரண சோதியில் பொலிந்தனை போற்றி

வேண்டிய வரம் தரு சற்குரு போற்றி
ஆண்டருள் எங்களை அனுதினம் போற்றி
பாடகச்சேரி பைம்பொன் மாநகர் பேர்
ஆடகக் குன்று நின் அடிகள் போற்றியே !


அன்பே காளி

அருள் செய்தாய் நீயே ! அகிலாண்டத் தாயே !
அன்பே ! ஆருயிரே காளி !
அன்பே ! ஆருயிரே காளி !

அன்பின் உருவே ! அருந்தவ மணியே !
துன்பம் துடைத்து துயரம் போக்கிடுவாய்
கண்ணின் மணியே ! என் மன விளக்கே !
உன்னைத் தொழுதே உயர்ந்திடல் கண்டோம்.

கருணைக் கடலே ! கற்பகத் தருவே !
இருளில் ஒளியே ! அருளில் மழையே !
கருவறைத் திருவுரு கருநீல முகத்தால்
பெருங் குறை மாற்றும் பெண் தெய்வம் நீயே .

கலைகளின் வித்தே ! கருதுவோர் சொத்தே !
மலைஎனத் துயரமும் மறைந்து போகாதோ?
அலை கடல் அமர்ந்த அகில நாயகியே !
உலகாள்வாரே ! உன்னடி சேர்ந்தோர்.


அருள் செய்தாய் நீயே ! அகிலாண்டத் தாயே !
அன்பே ! ஆருயிரே காளி !
அன்பே ! ஆருயிரே காளி !

காளி பல்லாண்டு


கலைமகளே ! திருமகளே ! மலைமகளே ! காலைக் கதிரொளியே !
குலக்கொழுந்தே ! கொற்றவையே ! காளிஎனும் கலைக்கடலே கருணை ஈவாய் !
சிறந்தொளிசேர் செம்பூவும் பசுந்தழையும் சேர்ந்தனபோல் சிவமும் தாயும்
அறம் தழைக்க நேர்பாதி கலந்தகோல அழகினுக்கு ஆயிரம் பல்லாண்டு

விடிவறியா உயிர்கள் பால் வினைநீக்கி விழிநோக்கி அருளே செய்யும்
கடகமழும் மலர்க்கூந்தல் காளிகாம்பாள் கண்களிக்க அள்ளியுண்டே
அடிமுதலாய் அன்பர்தமை அணைந்தமையால் அழகுபுகழ் காமாட்சியானாய்
படிஎழுத ஒண்ணாத பாவாய் நின் பாங்கினுக்கு ஆயிரம் பல்லாண்டு

முல்லைமுதல் மக்களுயிர் அத்தனைக்கும் மூலத்தாய் நீயே அன்றோ !
எல்லையிலா காலவினை சிலந்தியாக எழுப்பிவிடும் துன்பப் பின்னல்
தொல்லையினுள் வீழுமுயர் துயர்துடைக்கத் தோகையுறு உமையுமாவாய்
அல்லலிலாப் பெருவாழ்வே ! அருமருந்தே ! அன்பினுக்கு ஆயிரம் பல்லாண்டு

படியறியோம்! நின்பாதத்தின் பங்கறியோம் ! பல்வேறு வினைகள் தம்மால்
இடிஇடிக்கும் கொடுஞ்செயல்கள் இழைத்தபோதும் இன்னுயிர்பால் கனிவு கண்டோம்!
படிவளரப் பொருளீந்து உணவூட்டி உலகுவளர்க்கும் உலகாத்தம்மையே!
அடிதொழுவோம் ! அடைக்கலம் காண் ! அறம்வளர்த்த அருளினுக்கு ஆயிரம் பல்லாண்டு.

வெற்றியினைச் செருக்கோடு விரும்புகின்றேன் விளையாட்டாய்த் தோல்வி தந்தே
பற்றுடைய ஆணவத்தின் முனைமழுங்கப் பனிமுறுவல் செய்த எந்தாய் !
வேற்றுருவக் கருங்கல்லாய் கிடந்த நெஞ்சை வெண்கமலப் பூவாய்த்தானும்
பொற்புருவாய் ! அருள் தந்தாய் ! பூங்கோதாய் ! புதுமைக்கு ஆயிரம் பல்லாண்டு.

கார்மேனிச்செங்கண் கதிர்மதியம் போல் முகத்தைக் காணா இருப்பேனோ?
பேர்பெரியாய் உனை வணங்கி வாழ்த்தி உண்மை உணர்ந்துய்த்தேன்
சீர் பெருகும் காளிகாம்பாள் அம்மே நின் சீரடிக்கே சிவமானேன்
ஏரார்ந்த கண்ணி ! ஏலவார் பூங்குழலி ! எளிமைக்கு ஆயிரம் பல்லாண்டு

சிரம் மூன்றும் திருவடியில் இருக்கக் கண்டேன் ! இச்சிறியேன் சிரம் வைத்தால் தப்பேதுண்டோ?
கரமலரால் கைநீட்டி அழைக்கும் தாயே ! நின் கருணைக்காயிரம் பல்லாண்டே
பேரருளே ! பஞ்சதசாட்சரத்தை நெஞ்சகத்தே பிரித்தறியா என்னைப்
பாரதனுள் கண்பாராய் ! பால்மொழியே ! பரிவினுக்கு ஆயிரம் பல்லாண்டு

உன்னடிமைப் பரவுதற்கு மண்ணகந்தான் ஒளிர்பூவை பூத்துப் போற்றும்
மின்னும் பெருஆழியோடு வானகமும் மின்முத்தால் நீரால் போற்றும்
தின்னவரு செந்தழலோ அகிற்புகையைத் தென்றலுடன் தூவிப்போற்றும்
பொன்னடியை எங்ஙனம் நான் போற்றிடுவேன் ? புகழினுக்கு ஆயிரம் பல்லாண்டு

மண்ணகத்தின் படிமைதனைச் சிற்பியர்கள் மான்புறவே சமைத்துத் தந்தார்
தன்னகத்தில் ஓவியர்கள் வரைந்துன்றன் மலரடியைத் தொழுது நின்றார்
என்னகத்தில் உள்மலரும் கவி இதழால் எழில்படியைத் தொட்டேன் எந்தம்
பண்ணகத்து தமிழேற்பாய் ! பாகு கனிமொழியே ! பரிவினுக்காயிரம் பல்லாண்டு

இருள் அகல முத்தங்கிச் சுடரழகினுக்குத் திருப்பல்லாண்டு !
பொருள் விரிக்கும் விழிகளோடு புதுமுறுவல் அழகினுக்குத் திருப்பல்லாண்டு !
மருள்அகற்றி முத்தேவியர் கலந்த முழு அழகினுக்குத் திருப்பல்லாண்டு !
அருள் பொழியும் காளி அன்னைக்குக் கூறுவோம் பல்லாண்டு பல்லாண்டு .

எழுத்தில் காளி


அன்னை பராசக்தியே!
அண்டமெல்லாம் காக்கும் காளி மஹாசக்தி !
அண்டமெல்லாம் காக்கும் காளி மஹாசக்தி !
அன்னை பராசக்தியே!

அம்பிகையே !அன்னையே! என்மீது அருள்மழை பொழிவாயே !
அன்புடனே என்னை நீ ஆண்டருள் செய்வாயே !

ஆறாதாரத்திலும் நின்று ஆட்சி புரிபவளே !
ஆதாரமாய் இருந்து எங்கள் அல்லல் களைவாயே !

இதய பீடத்திலே இருந்து இன்னருள் புரிபவளே!
இன்னல்களை நீக்கி என்றும் இன்பம் அளிப்பாயே !

ஈரேழு புவனத்தையும் படைத்து காத்தழிக்கும் தாயே !
ஈனப் பிறவி என்னை ஈர்த்து ஆட்கொள்வாய் நீயே !

உலகனைத்தையுமே காத்து ரட்சிப்பவள் நீயே !
உள்ளத்தின் இருள் அகற்றி உண்மையை உணர்ந்திட செய் நீயே !

ஊழிக் கூத்தாடும் சிவனின் உடனுறையும் சக்தியே !
ஊற்றாகப் பெருகி எங்கள் உள்ளத்தில் நிறைவாயே !

என்மனத் தாமரையில் என்றும் எழுந்தருள்வாய் நீயே !
எண்ணியதை நன்றாய் முடித்திட எனக்கருள் செய்வாயே !

ஏழண்டம் எங்குமே நிறைந்து ஏகமாய் இருப்பவளே !
ஏகாந்த வெளியில் என்னை இருந்திடச் செய்வாயே !

ஐயனின் மேனியிலே இடப்புறம் அலங்கரிக்கும் தாயே !
ஐயம் சினம் அச்சம் அனைத்தையும் அழித்தருள் செய்வாயே !

ஒன்றாய் அரும்பிப் பின் எங்கும் பலவாய் விரிந்தவளே !
ஒலியாய் ஒளிவெள்ளமாய் எங்கும் பரவி இருப்பவளே !

ஓங்காரி ! ஆங்காரி ! என்னுள்ளே என்றும் ரீங்காரி !
ஓயாதுன் பதத்தை எந்தன் உச்சியில் வைத்திடு நீ !

ஔவியம் தீர்ப்பவளே ! எங்கள் ஆணவம் அழிப்பவளே !
ஔடதமாய் இருந்து எமக்கு நலம் பல அளிப்பவளே !

ஆய்த எழுத்தினைப் போல் மூன்று நயனங்கள் கொண்டவளே !
ஆயுதமாய் வந்து எம்மை ஆபத்தில் காப்பவளே !


அன்னை பராசக்தியே!
அண்டமெல்லாம் காக்கும் காளி மஹாசக்தி !
அண்டமெல்லாம் காக்கும் காளி மஹாசக்தி !
அன்னை பராசக்தியே!



Tuesday, 15 May 2012

எண்ணில் காளி

ஓம் க்ரீம் காளி ஓம் க்ரீம் காளி

ஓம் க்ரீம் காளி ஓம் க்ரீம் காளி

காளி என் தாயே எனைக் காக்க வருவாய்
கண்ணால் கருத்தால் காட்சி கொடுப்பாய்
கல்லாய் இருந்த மனத்தைக் கரைத்தாய்
கலங்காதிருப்பேன் என் உள்ளே இருப்பாய்
கலங்காதிருப்பேன் என் உள்ளே இருப்பாய் ஓம் க்ரீம் காளி

ஒன்றான ஆதி சக்தியும் நீயே
ஒளியாயும் ஒலியாயும் இருப்பாய் நீயே
ஓங்கார ரூபி உனையே நினைத்தேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .

இரண்டாய் சிவசக்தி ஆகின்ற தாயே
இருமைகளாய் நீ இருக்கின்றாயே
இனிய உன் எழிலை நினைத்தே இருப்பேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .

மூன்றான தமிழாய் தோன்றிய தாய் நீ
மூலாதாரத்துள் மூண்டு எழும் சோதி
மூலமாய் முதல்வியாய் உனையே நினைத்தேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .

நான்கான வேதமாய் நவிலப் படுவாய்
நாவார உன்னைப் புகழ்ந்து பாடிடுவேன்
நயந்து நீ வந்து நல்லருள் காட்டி
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .

ஐந்தான ஆதி பூதங்களானாய்
ஐம்புலன் களையும் நீ அடக்கி ஆண்டிடுவாய்
ஐயமற உனது அருளை அளித்தே
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .

ஆறாய்த் தோன்றும் ஆதாரமானாய்
ஆதியாய் நின்ற அருட்பெரும் சோதி
ஆறாய்ப் பெருகும் உன் அருளை அளித்தே
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .

ஏழாய் இனிய சுரங்களும் ஆனாய்
ஏழண்டத்திலும் இசையாய் இருப்பாய்
ஏந்திழையாள் உனை நினைத்தே இருப்பேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .

எட்டாய் சித்துகளாய் இருந்தாய் நீ
எல்லை இலாது எங்கும் நிறைந்தாய்
எழிலான உன்னை நினைத்தே இருப்பேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .

ஒன்பதாய் கோள்களாய் மணியாய் இருந்தாய்
ஒன்றினுக்குள்ளே ஒன்றாய் இருந்தாய்
ஒப்பிலா உனது அருளை அளித்தே
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .

பத்தாய் திசைகளாய் பரவி இருந்தாய்
பார்க்கும் இடம் தொ றும் நீக்கமற நிறைந்தாய்
பாங்குடன் அருள் செய்யும் உனையே நினைத்தேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .

எண்ணும் எழுத்தும் நீயே ஆனாய்
எண்ணிலாக் கோடி ரூபங்கள் ஆனாய்
என்றும் உன்னை நினைத்தே இருப்பேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .


ஓம் க்ரீம் காளி ஓம் க்ரீம் காளி

ஓம் க்ரீம் காளி ஓம் க்ரீம் காளி




நிலையானவள்


நீயே எனக்குள் என்றும் நிலையானவள்.
நித்தம் என்னுள் உறைந்து நின்று உயிராகிக் காப்பவள்
நீயே எனக்குள் என்றும் நிலையானவள்

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்றவள்
தன்னிகர் இல்லா தனிப்பொருளாய் விளங்குகின்றவள்
ஊனாக உயிராக உறைகின்றவள்
உண்மைப் பொருளாகி அறிவாகி அன்பாகி நிறைந்தவள்
நீயே எனக்குள் என்றும் நிலையானவள்

கண்களிலே கருணை மழை பொழிகின்றாயே
கனி அதரத்தால் நல்லாசி தருகின்றாயே
முகத்தினில் புன்னகை பொங்க வருகின்றாயே
மோக வாதை நீக்கி என்னை உன்னோடு இணைத்திட
நீயே எனக்குள் என்றும் நிலையானவள்

அறியாமல் செய்த பிழை பொறுப்பாய் அம்மா
மனம் அறிந்தே செய்யும் பிழையைத் தடுப்பாயம்மா
தினம் தினம் உன் திருமுகம் நினைப்பேனம்மா
தீப ஒளி போல் என்னுள் திகழ்ந்து வாழ்வுக்கு வழிகாட்டி
நீயே எனக்குள் என்றும் நிலையானவள்

ஞானத்தை நல்குகின்ற கலைமகளும் நீ ,
இன்ப போகத்தைத் தருகின்ற அலைமகளும் நீ
மோனத்தை வழங்குகின்ற மலைமகளும் நீ
அறம் செய்து பொருள் பெற்று இன்பம் எய்தி முக்தி வழங்கிட
நீயே எனக்குள் என்றும் நிலையானவள்

நீயே எனக்குள் என்றும் நிலையானவள்.
நித்தம் என்னுள் உறைந்து நின்று உயிராகிக் காப்பவள்
நீயே எனக்குள் என்றும் நிலையானவள்

நல்வரவு

அனைவருக்கும் வணக்கம் .

எமது கருத்துக்களை விமர்சனம் செய்ய வரும் உங்களது வரவு நல்வரவாகட்டும்.

உங்களது வரவிற்கு எமது நன்றிகள் பல .