அன்னை பராசக்தியே!
அண்டமெல்லாம் காக்கும் காளி மஹாசக்தி !
அண்டமெல்லாம் காக்கும் காளி மஹாசக்தி !
அன்னை பராசக்தியே!
அம்பிகையே !அன்னையே! என்மீது அருள்மழை பொழிவாயே !
அன்புடனே என்னை நீ ஆண்டருள் செய்வாயே !
ஆறாதாரத்திலும் நின்று ஆட்சி புரிபவளே !
ஆதாரமாய் இருந்து எங்கள் அல்லல் களைவாயே !
இதய பீடத்திலே இருந்து இன்னருள் புரிபவளே!
இன்னல்களை நீக்கி என்றும் இன்பம் அளிப்பாயே !
ஈரேழு புவனத்தையும் படைத்து காத்தழிக்கும் தாயே !
ஈனப் பிறவி என்னை ஈர்த்து ஆட்கொள்வாய் நீயே !
உலகனைத்தையுமே காத்து ரட்சிப்பவள் நீயே !
உள்ளத்தின் இருள் அகற்றி உண்மையை உணர்ந்திட செய் நீயே !
ஊழிக் கூத்தாடும் சிவனின் உடனுறையும் சக்தியே !
ஊற்றாகப் பெருகி எங்கள் உள்ளத்தில் நிறைவாயே !
என்மனத் தாமரையில் என்றும் எழுந்தருள்வாய் நீயே !
எண்ணியதை நன்றாய் முடித்திட எனக்கருள் செய்வாயே !
ஏழண்டம் எங்குமே நிறைந்து ஏகமாய் இருப்பவளே !
ஏகாந்த வெளியில் என்னை இருந்திடச் செய்வாயே !
ஐயனின் மேனியிலே இடப்புறம் அலங்கரிக்கும் தாயே !
ஐயம் சினம் அச்சம் அனைத்தையும் அழித்தருள் செய்வாயே !
ஒன்றாய் அரும்பிப் பின் எங்கும் பலவாய் விரிந்தவளே !
ஒலியாய் ஒளிவெள்ளமாய் எங்கும் பரவி இருப்பவளே !
ஓங்காரி ! ஆங்காரி ! என்னுள்ளே என்றும் ரீங்காரி !
ஓயாதுன் பதத்தை எந்தன் உச்சியில் வைத்திடு நீ !
ஔவியம் தீர்ப்பவளே ! எங்கள் ஆணவம் அழிப்பவளே !
ஔடதமாய் இருந்து எமக்கு நலம் பல அளிப்பவளே !
ஆய்த எழுத்தினைப் போல் மூன்று நயனங்கள் கொண்டவளே !
ஆயுதமாய் வந்து எம்மை ஆபத்தில் காப்பவளே !
அன்னை பராசக்தியே!
அண்டமெல்லாம் காக்கும் காளி மஹாசக்தி !
அண்டமெல்லாம் காக்கும் காளி மஹாசக்தி !
அன்னை பராசக்தியே!
No comments:
Post a Comment