ஆடகப் பொற்சபை ஆண்டவர் அருள் பெற்ற
பாடகச்சேரி வளர் பரமகுரு போற்றி !
ஏடகத் தெழுதவும் ஒண்ணுமோ நினது புகழ்
பாடுவோம் இராமலிங்க சுவாமியே போற்றி.
நாடி வருவோர்க்கெல்லாம் நலம் பல நல்கும் எம்
தேடரிய மாணிக்கத் திருவுரு போற்றி
கூடுவோர் குறிப்பறி கொற்றவ போற்றி
நாடெலாம் போற்றிடும் நற்றவ போற்றி
கொங்கு நன்னாடு வந்த குருமணி போற்றி
பங்கமில் கன்னட பைந்தவ போற்றி
பொங்கு புனல் பொன்னி நாட்டிடைத் திருப்பணி
தங்கிச் செய்த தத்துவ போற்றி
சித்தர் எரிசாமி பத்தரே போற்றி
பக்தர்கட் கருள் செய்த சித்தரே போற்றி
அன்னதான தாதா எம் அரசே போற்றி
கன்னல் கறி அற்புதம் நிகழ்த்தினை போற்றி
அருமருந்து அளித்து பிணி தவிர்த்தவ போற்றி
அருமை மிகு உயிர் கொடுத்த வள்ளலே போற்றி
விடம் தவிர்த்த வித்தக வேந்தரே போற்றி
மடம் மரு நெஞ்சுக்கும் இறங்கினை போற்றி
அறச்சாலை நிறுவி அறம் வளர்த்தனை போற்றி
துறவியர் போற்றிடும் தூமணி போற்றி
உண்டியல் காணிக்கை ஏற்றனை போற்றி
கொண்ட பொருள் குடந்தைக்கு ஆக்கினை போற்றி
கிளர்ந்தெழுந்து கீழக் கோட்டம் கண்டாய் போற்றி
வளந்தரு திருப்பணி புரிந்தனை போற்றி
ஆகத்தை நாகப்பர்க்கு ஆலயம் ஆக்கி
போகத்தை செய் தவமாமுனி போற்றி
காஞ்சி மாமுனி புகழ் வளர்த்தனை போற்றி
வாஞ்சைமிகு வைரவர் திருத் தொண்டரே போற்றி
தண்டபாணியைத் தொழுது அமைத்தாய் போற்றி
தண்டம் கைக்கொண்டு எங்கும் உலவினை போற்றி
" மெய்போலும்மே " எனும் மந்திரத்தினை
ஐய நின் எழுத்தினில் பொறித்தனை போற்றி
புன்னைநல்லூர் கிண்டி பங்களூர் உகந்து
நன்னெறி துலக்கி நவின்றவ போற்றி
படம் பக்க நாதர் திருவொற்றியூர் வதிந்து
நடம் நவில் திருச்சபை சமைத்தாய் போற்றி
புடமிட்டு அமைந்த பொன்மேனி தன்னை
திடம்பெற நிறைநிலைக் காக்கினை ஐயா.
வாரணன் குமரன் வடிவுடை நாயகி
காரணன் கழல்பணி கண்மணி போற்றி
சீரணி இராமலிங்க சுவாமிகள் போற்றி
பூரண சோதியில் பொலிந்தனை போற்றி
வேண்டிய வரம் தரு சற்குரு போற்றி
ஆண்டருள் எங்களை அனுதினம் போற்றி
பாடகச்சேரி பைம்பொன் மாநகர் பேர்
ஆடகக் குன்று நின் அடிகள் போற்றியே !
No comments:
Post a Comment