Tuesday, 15 May 2012

நிலையானவள்


நீயே எனக்குள் என்றும் நிலையானவள்.
நித்தம் என்னுள் உறைந்து நின்று உயிராகிக் காப்பவள்
நீயே எனக்குள் என்றும் நிலையானவள்

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்றவள்
தன்னிகர் இல்லா தனிப்பொருளாய் விளங்குகின்றவள்
ஊனாக உயிராக உறைகின்றவள்
உண்மைப் பொருளாகி அறிவாகி அன்பாகி நிறைந்தவள்
நீயே எனக்குள் என்றும் நிலையானவள்

கண்களிலே கருணை மழை பொழிகின்றாயே
கனி அதரத்தால் நல்லாசி தருகின்றாயே
முகத்தினில் புன்னகை பொங்க வருகின்றாயே
மோக வாதை நீக்கி என்னை உன்னோடு இணைத்திட
நீயே எனக்குள் என்றும் நிலையானவள்

அறியாமல் செய்த பிழை பொறுப்பாய் அம்மா
மனம் அறிந்தே செய்யும் பிழையைத் தடுப்பாயம்மா
தினம் தினம் உன் திருமுகம் நினைப்பேனம்மா
தீப ஒளி போல் என்னுள் திகழ்ந்து வாழ்வுக்கு வழிகாட்டி
நீயே எனக்குள் என்றும் நிலையானவள்

ஞானத்தை நல்குகின்ற கலைமகளும் நீ ,
இன்ப போகத்தைத் தருகின்ற அலைமகளும் நீ
மோனத்தை வழங்குகின்ற மலைமகளும் நீ
அறம் செய்து பொருள் பெற்று இன்பம் எய்தி முக்தி வழங்கிட
நீயே எனக்குள் என்றும் நிலையானவள்

நீயே எனக்குள் என்றும் நிலையானவள்.
நித்தம் என்னுள் உறைந்து நின்று உயிராகிக் காப்பவள்
நீயே எனக்குள் என்றும் நிலையானவள்

No comments:

Post a Comment